Friday, March 30, 2012

என்றும் மறக்கிலேன் , ஏற்பாய் என் இரங்கற் பா

அத்தனை இழந்த பாலகனாய்  வந்தனன்
அபலைத் தாயுடன் ஆறுவயதினில் கடம்பவனத்தே
கைம்பெண்ணொடு குழந்தையைக் காத்திட நின்றனரே
கைம்மாறு கருதா சோதரர்கள் அறுவரும்

பள்ளியில் கற்றது கைமண் அளவே             
பாடம் பெற்றது பரந்த உலகினில்
குலத்தின் தொழிலாய்க்கொண்ட கணக்காம்
குறைவின்றி கற்றான் குமரன் ஆனதும்    

உழவாரப் பணியில் உள்ளம் மகிழ்ந்தே
உவந்து அருளினான் உள்ளூர் மகேசன்
இராசகோபால் மைந்தன் தன் மனம்போல
இராசாண்டார் திருமலையில் கணக்கர் பணியை

உழைப்பில் உறுதியும் உண்மையும் நேர்மையும்
உடன் கொண்ட குணங்களாய் உத்தமனவனும்
மாமன் மகளை மணமுடிக்க வேண்டினான்
மறுப்பு ஏதுமின்றி மணநாள் குறித்தனர்

தயாளன் தாய்மாமன் தாரை வார்த்ததுவோ
தங்கமேனியாள் தரமிகு குணத்தவளாம்
ஒத்த  கருத்துடையோர் இருவர் இவரும்
உவந்து பெற்றதுவோ ராம லட்சுமணராம்

சொல்லில் நயமுடையான் சோர்வே அறிந்திடான்
சொந்தம் பாராட்ட தயக்கம் துளிகொள்ளான்
வஞ்சம் தானறியான் வள்ளல் குணமுடையான்
குஞ்சம்மா வீடுறக் கடைவரைக் காத்திட்டான்

சதாசிவ மனத்துடையான் சமரசம் விரும்பிடுவான்
உதாசினம் செய்திடான் உற்றாரை எப்பொழுதும்
நையாண்டி செய்திடுவான் நாமெல்லாம் சிரித்திடவே
வையான் ஒருவரையும் வம்புதும்பு செய்யானே

நல்லதோ , கெட்டதோ நானென்று முன்நிற்பான்
எல்லார்க்கும் அவனிருந்தான் நேற்றுவரை இக்கரையில்
பொல்லாத எமனைத்தான் புறங்காட்ட மறந்திட்டான்
சொல்லாதே போய்விட்டான் இனியவன் ஜெயராமன்

மென்மனத்தாள் அரற்றுகிறாள் ஆராத்துயரினிலே
தன்மனத்தைத் தானிழந்து தவிக்கின்றார் உன்மக்கள்
அலறித்துடித்திடுவாள் உன்மனைவி அறிகிலையோ நீயுந்தான்
பதறித்துடித்திடுவார் உன்மக்கள் அறிகிலையோ நீயுந்தான்

என் சொல்லி ஆற்றிடுவேன் உனதருமை மனையாளை
என்சொல்லித் தேற்றிடுவேன் உனதருமை மைந்தரை
கண்வற்ற அழவைத்துக் காவிரியில் கரைந்தவனே        
விண்பெற்ற சுவர்க்கத்தில் நிலைத்திடுவாய் சாந்தியுடனே

காலை பிறப்பதுவும் மாலை இறப்பதுவும்
கண்முன் நடக்கும் கதிரவன் பாடமன்றோ
நாளை பிறப்போரும் நாள்வந்தால் சென்றிடுவார்
வேளை வரும்வரை நல்லோராய் வாழ்ந்திடுவோம்

வருவோமோ ஒருநாளில் அவ்வுலகு
இருப்போமோ ஒருங்கேதான் இறைவனடி

                         சதா உன் நினைவுடன் சபா வடிவேலு